கோவையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் செப் 23 ஆம் தேதி நள்ளிரவு வரை அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதை அடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
கோவை: அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதங்களும், சமூக விரோத செயல்களால் வழக்கமான பரபரப்பை கடந்து, கடந்த மூன்று நாட்களாக பதட்டத்துடன் காணப்படுகிறது கோவை மாவட்டம்.
செப்டம்பர் 22 ஆம் தேதி என்னென்ன நடந்தது.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது. அன்று தான், பாஜக அலுவலகம் மற்றும் வெரைட்டி ரோடு பகுதியில் என இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த இரு சம்பவங்களை தாண்டி அன்று கோவையில் பல முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றது -- இந்து முன்னணி முக்கிய நிர்வாகியாக விளங்கிய சசிகுமார் படுகொலை நடந்த தினம் அனுசரிக்கப்பட்டது; அன்று காலை என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் மற்றும் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் கைது செய்யபட்டு விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர்; அதேபோல், அன்றைய தினம் எம்.பி. ஆ. ராசா குறித்து மிரட்டும்.தொனியில் பேசிய பாஜக மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் மீது கூடுதலாக எஸ்.சி/ எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம், என்.ஐ ஏ சோதனை மற்றும் பாஜக மாவட்ட தலைவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டம் இவற்றை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்களும், இந்து இயக்கங்களும் மாறி மாறி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி, டவுன் ஹால், உக்கடம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து போராட்டங்களும், கண்டன கூட்டங்களும் நடைபெற்றது.
மறுபுறம், பாஜகவினர் மாவட்ட தலைவர் மீது போடப்பட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.

பெரும் பரபரப்பாக காணப்பட்ட செப்டம்பர் 22 ஆம் தேதி, இரவு தான் சித்தாபுதூரில் உள்ள பாஜக மாநகர மாவட்ட அலுவலகத்தின் வலதுபுறம் உள்ள டிரான்ஃபார்மில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அதே சமயம், ஒப்பணக்கார வீதி, மாருதி சில்க்ஸ் எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த இரு சம்பவங்களை அடுத்து அன்று இரவே கோவையில் பதற்றம் பற்றிக்கொண்டது.

பாஜக அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அன்று இரவே பாஜகவினர் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு கோவை மாநகரப் பகுதியில் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகரம் முழுவதும் வாகன தணிக்கை, லாட்ஜியில் தங்கியிருப்போரை கண்காணிப்பது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டனர்.
அன்றைய தினம், உதவி ஆணையாளர் வின்சென்ட் தலைமையில் ஐந்து தனிப்படை அமைத்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற குற்றவாளிகளை தேடும் பணி மற்றும் பதற்றத்தை தணிக்கும் படியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
செப்டம்பர் 23 ஆம் தேதி
காலை முதலே மேலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அதிகரித்த பதற்றம்.
செப்டம்பர் 22 ஆம் தேதி இரவுடன் பதற்றம் தனியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி காலை 100 அடி ரோட்டில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது.

ரத்னபுரி பாஜக மண்டல தலைவர் மோகன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் விற்கப்படும் கடையை அவரது மகன் திறக்க வந்த போது, கடையின் மீதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளது தெரியவந்தது.
பாஜக அலுவலகம், ஒப்பணக்கார வீதி மற்றும் 100 அடி ரோடு என இந்த மூன்று இடங்களில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவங்கள் குறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புறநகர் பகுதிகளிலும் பற்றி கொண்டது பதற்றம்.
மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு.

பாஜக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொன்னுராஜு மற்றும் பொள்ளாச்சி குமரன் நகர் சிவா, சரவணன் உள்ளிட்டோர் வீடுகள் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் 2 கார், 2 ஆட்டோ சேதமடைந்தன.

அன்றே, மேட்டுப்பாளையம் பகுதியில் மதன்குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தன.
குனியமுத்தூரில் இந்து நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அடுத்து, குனியமுத்தூரில் உள்ள இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகு என்பவர் கார் மீது நேற்று மதியம் மர்ம நபர்கள் தீ வைக்க முயற்சித்துள்ளனர். அதே, பகுதியை சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பிரபு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டன.
கொடி அணிவகுப்பு

தொடர்ந்து, நடைபெற்று வந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால், நேற்று மாலை காந்திபுரம் பகுதியில் மாநகர போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான சட்டங்களில் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் விரைவில் குற்றவாளிகள் பிடிப்படுவர் என்று உறுதி அளித்தார்.
கோவைக்கு வந்தார் ஏஜிடிபி

கொடி அணிவகுப்பை தொடர்ந்து, இரவு கோவை மாநகர காவல் ஆணையாளரின் அலுவலகத்தில் ஏஜிடிபி தாமரைக்கண்ணன் தலைமையில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், விசாரணையை துரிதப்படுத்தி, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்யும்படி, ஏஜிடிபி உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
கோவைப்புதூரில் இரு இடங்களில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு

இவ்வாறு இருக்க, மீண்டும் நேற்று இரவு கோவைப்புதூரில் வசிக்கின்ற அனந்த கல்யான கிருஷ்ணன் என்ற சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரளா கேந்திர பொறுப்பாளார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டன.
நள்ளிரவு, குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுப்புலட்சுமி நகர் பகுதியில் வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் பாஜக நிர்வாகியான பரத் என்பவர் காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரு சம்பவங்களை அடுத்து குனியமுத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அமைதியை நிலைநாட்ட இரவு பகலாக காவலர்கள் தீவிர கண்காணிப்பு.
கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது அடுத்தடுத்து அரங்கேறும் குற்ற சம்பவங்களால் வழக்கத்துக்கு மாறாக பதட்டமான சூழலை கட்டுப்படுத்தும் விதமாகவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், மாநகரின் முக்கிய இடங்களில் காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 ஆயிரம் போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்து, இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான உக்கடம், கரும்புகடை, குனியமுத்தூர், கோவைப்புதூர், ஆத்துப்பாலம் டவுன்ஹால், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 400 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
செப்டம்பர் 24 ஆம் தேதி: கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டனர்

ஏற்கனவே, 4000 க்கும் மேற்பட்ட சார் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூடுதல் பாதுகாப்பதற்காக மதுரை, திருச்சி, சேலம் என வெளி மாவட்டங்களில் இருந்து 1200 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் 100 கமாண்டோ படையினர், 400 அதிவிரைவு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கோவையின் முக்கிய பகுதிகள் என பார்க்கும் இடமெல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஒட்டுமொத்த கோவையும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
கோவையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பேணும் கோவையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.