வாகன விதிமீறல் குற்றங்களுக்காக இந்தாண்டு ஜனவரி முதல் கடந்த 8 மாதங்களில் வசூலிக்கப்பட்ட தொகையானது கடந்த 2021 ஆண்டை விட சுமார் ரூ.2 கோடி அதிகமாகும், அதேபோல், உயிரிழப்பில்லாத விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்தாண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது.
கோவை: வாகன விதிமீறல் புகார்களுக்காக கோவை மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் கடந்த 8 மாதங்களில் 5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தகுந்தபடி, வாகன விதிமீறல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதன்படி, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த அபராத வசூலானது, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 8 மாத காலத்தில், 8 லட்சத்து 84 ஆயிரத்து 867 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 5 கோடியே 7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, 10 லட்சத்து 66 ஆயிரத்து 862 வழக்குகள் பதியப்பட்ட அபராதமாக 3 கோடியே 67 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நடந்த, உயிரிழப்பு ஏற்படாத விபத்துக்களின் எண்ணிக்கை 365ஆக இருந்தது. ஆனால், இந்தாண்டில் இந்த எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் ஆகஸ்ட் வரை 148 ஆக இருந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, இந்தாண்டில் 183 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாகன விதிமீறல் குற்றங்களுக்காக, 2021ஆம் ஆண்டில் 97 ஆயிரத்து 432 பேரின் லைசென்ஸ் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டில் ஆகஸ்ட் இறுதி வரை, 69 ஆயிரத்து 590 பேரின் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.