கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் பெட்ரோல் மற்றும் கரசின் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாநகர மாவட்ட அலுவலகம் முன்பாக கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெரைட்டி ஹால் ரோடில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட விளக்கு ஒன்று ஒரு கடையின் முன்பு கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவங்களை விசாரிக்க துணை ஆணையர் வின்சென்ட் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர் வி பாலகிருஷ்ணன், அசம்பாவிதத்தை நடத்த முயற்சி செய்தவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, லாட்ஜில் தங்கி இருப்போர், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக செல்வோரிடம் விசாரணை என அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களால் கோவை மாநகரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.