திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏதும் நடைபெறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைப்பதற்காக தான் டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தேன். டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது என்று கோவை விமான நிலையத்தில் பேசினார்.
கோவை: உட்கட்சி விவகாரம் குறித்து பேசுவதற்காக டெல்லிக்கு செல்லவில்லை, தமிழகத்திற்கான முக்கியமான சில திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கவே உள்துறை அமைச்சரை சந்தித்ததாக அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்று திரும்பிய பின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை குறித்து பேசப்பட்டது. அதில் கோதாவரி - காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்
திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல். ஆ.ராசா கீழ்தரமாக, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கதக்கது. ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா ? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன். இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவிக்லை.
மேலும் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்க்கு தடையாக இருக்கும். தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது. விடியா திமுக ஆட்சியில் ஏதும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைப்பதற்காக தான் டெல்லி சென்றேன்.
தமிழகத்தில் காய்ச்சல் பரவலைக் தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவகுழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலைக் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.