கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்திற்காக நகை செய்ய கொடுக்கப்பட்ட 2 கிலோ தங்கத்துடன் மாயமான சுஜித் மைட்டி என்ற நபரை பொறி வைத்து பிடித்து கைது செய்து, ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர், செட்டி வீதியில் தங்கி நகை பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக ஒரு நகைபட்டறையை ஆரம்பித்துள்ளார்.
தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. இதனால் சுஜித் மைட்டியிடம் பலர் தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வாங்கிச் சென்றுள்ளனர்.

சுஜித்தின் நகை வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்துள்ளது.
இதன் மூலம் அவரிடம் கிலோ கணக்கிலான தங்க கட்டிகள் குவிந்தன. அதனை அவர் நகைகளாக மாற்றி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சுஜித் மைட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெட்டிங் (சூதாட்டம்) கட்ட தொடங்கினார்.
ஆரம்பத்தில் அவருக்கு அதில் பணம் வர தொடங்கியது. பின்னர் அதில் அவர் லட்ச கணக்கான பணத்தை இழந்துள்ளார். இதற்காக அவர் பலரிடம் வாங்கிய தங்க கட்டிகளை விற்று செலவு செய்து வந்துள்ளார்.
ஐ.பி.எல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை எப்படியாவது விரைவில் மீட்க வேண்டும் என நினைத்த அவர், ஆன்லைன் சூதாட்டம் தான் அதற்கு சிறந்த வழி என நினைத்து அதிலும் பணத்தை செலவழித்தார். ஆனால் அதிலும் பணத்தை இழந்தார்.
நாளடைவில் அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் அவர் ஒருவரிடம் வாங்கிய தங்கத்தை மற்றவரிடம் கொடுத்து என சில நாட்கள் சமாளித்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல நகை கொடுத்தவர்கள் அவரிடம் தங்கத்தை கேட்க தொடங்கினர்.
கோவையில் இருந்தால் தன்னை விடமாட்டார்கள் என நினைத்த அவர் இங்கு இருந்து 2 கிலோ தங்கத்துடன் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொல்கத்தாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் சுஜித் மைட்டி 2 கிலோ நகைகளுடன் தப்பினார்.

தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் அவர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகையை கொடுத்த வடவள்ளியை சேர்ந்த கனகராஜ், செட்டி வீதியை சேர்ந்த குருசாமி, டவுன்ஹால் பகுதியை பிரகாஷ், ஜனா ஆகியோர் வெரைட்டி ஹால் போலீஸ் நிலையம் மற்றும் பெரியகடை வீதி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
2 கிலோ நகையை திருடி சென்ற சுஜித் மைட்டியை பிடிக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் துணை ஆணையர் மேற்பார்வையில் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில், பெரியகடை வீதி ஆய்வாளர் கண்ணையன், உதவி ஆய்வாளர் சிவகுமார், சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் மாரிமுத்து, காவலர்கள் கார்த்தி, உமா, பூபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த தனிப்படையானது, சுஜித் மைட்டியை தீவிரமாக தேடி வந்தது. அப்போது அவரது செல்போன் எண்ணின் சிக்னலை கொண்டு கண்டுபிடிக்க முயன்றனர். அதில் அவரது செல்போன் எண் காசி, வாரணாசி, நேபாளம் என பகுதிகளில் இருந்துள்ளது. இதனால், அவரது செல்போன் சிக்னலை பின் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை கண்டு பிடிக்க கோவையில் இருந்த அவரது உறவினரின் செல்போன் எண்ணை பின்தொடர போலீசார் முடிவு செய்தனர். உறவினரின் செல்போனை பின் தொடர்ந்த போது அவருக்கு சுஜித் மைட்டி புதிய செல்போன் எண்ணில் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அந்த எண்ணை வைத்து அவரை பிடிக்க முடிவு செய்தனர். அப்போது அவர் டெல்லியில் இருந்து கோவை வருவது தெரியவந்தது. போலீசார் அந்த எண்ணை கண்காணித்தனர். ரயில் மூலம் சுஜித் மைட்டி கோவை வருவதை உறுதி செய்த போலீசார் ரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் கலந்து அவரை பிடிக்க காத்திருந்தனர்.
கோவை ரயில் நிலையத்தில் அவர் இறங்கியதும் போலீசார் சுற்றி வலைத்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 2 கிலோ தங்கத்தில் அரை கிலோ தங்கத்தை அவர் ஆடம்பரமாக செலவு செய்தது தெரிவந்தது.
மேலும் அந்த பணத்தில் அவர் நட்சத்திர ஓட்டல் மற்றும் பெண்களிடமும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1,500 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்திற்காக நகை செய்ய கொடுக்கப்பட்ட 2 கிலோ தங்கத்துடன் மாயமான நபரை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.