கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என எஸ்.பி அலுவகத்தில் மனு அளித்தனர்.
கோவை: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி பகுதிகளில் நாளைய தினம் (செப் 20) கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ள இந்து முன்னணியை சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திராவிட பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக விழாவில் பேசிய திமுக எம்.பி இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரன் என்பவர் யார்..? என்று மனு சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது என்பதை மேற்கோள் காட்டிப் பேசினார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ள அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு புறம் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தாலும், மறு புறம் இந்துக்கள் என்றால் யார் என்று ஆ. ராசா மேற்கோள் காட்டியது அவரது தனிப்பட்ட கருத்தல்ல, மனு சாஸ்திரத்தில் உள்ளதை தான் அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார், இதற்கு முன்னால் பலரும் இவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிவித்து ஆ. ராசாவுக்கு திராவிட இயக்கங்களின் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், திமுக எம்.பி யாக பதவி வகிக்கும் ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று நாளை நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வெண்மதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடபண்பாட்டு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மதி, இந்திய ஒன்றியத்தில் உள்ள பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களை, பெருவாரியான இந்து மத நூல்களும், இதிகாசங்களும் இழிமக்கள் என்று குறிப்பிட்டுள்ளதை தான் ஆ.ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆ.ராசாவின் கருத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா பட்டியலினத்தை சார்ந்தவர் என்பதால் அவர் சொந்தமாக சொல்லாத ஒரு கருத்தை மனுஸ்மிருதியில் இருக்கும் கருத்தை சுட்டிக்காட்டியதற்காக வன்மம் கொண்டு இந்து முன்னணியினர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டே இந்து முன்னணி அமைப்பு இந்த கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. எனவே, காவல்துறை உடனடியாக தலையிட்டு, கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.
மேலும், மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை திறந்திருக்கும் கடைகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.