தொண்டையில் இரும்பு கம்பி குத்தியதால் கை, கால் செயலிழந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். வலிப்பு நோய் வந்தால் கம்பி, கத்தி போன்ற பொருட்களை நோயாளிகளிடம் கொடுக்க கூடாது. மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: தொண்டையில் இரும்பு கம்பி குத்தி, கை, கால்கள் செயலிழந்த பெண்ணை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவையில் கடந்த 28 ஆம் தேதி பெண் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது உடன் இருந்தவர்கள் அவரது கையில் இரும்பு கம்பியை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இரும்பு கம்பியானது, எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் தொண்டை பகுதியில் குத்தியதில் அவர், கை, கால்கள் செயலிழந்து ஆபத்தான நிலைக்குச் சென்றார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இரும்பு கம்பியை பத்திரமாக அகற்றினர்.
தீவிர சிகிச்சைக்கு பின் பெண்ணிற்கு கை, கால் செயலியக்கம் சீராக உள்ளதாக கோவை அரசு மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
மேலும், மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை, மூளை காய்ச்சல், கட்டி, ரத்தக்கசிவு என பல்வேறு காரணங்களினால் வலிப்பு நோய் ஏற்படுகிறது.
எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் ஏற்படக்கூடிய வலிப்பு நோய் குறித்து இன்றளவும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோய் வந்தால் அவர்கள் கையில் சாவி, கத்தி, சங்கிலி, இரும்பு கம்பிகள் போன்றவைகள் கொடுக்கும் மூட நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறானது.
வலிப்பு நோய் ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். கத்தி போன்ற ஆபத்தான பொருட்களை வலிப்பு வந்தவர்களிடம் கொடுப்பது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.