அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாளை செப் 15 (வியாழக்கிழமை) கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா நாளை, செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசியல் காட்சிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க நாளை (வியாழக்கிழமை) கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
அதன்படி, கட்சியின் தலைமை அறிவித்த பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும். மேலும், வருகிற 17-ந் தேதி கிணத்துக்கடவு தொகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., நடிகர் ரங்கநாதன், குன்னூர் விஜயலட்சுமி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
18-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா, தோவாலா ரவி, முஜிபுர் ரகுமான் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். அதேநாளில் பொள்ளாச்சி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், சினிமா டைரக்டரும், அ.தி.மு.க. கலைப்பிரிவு இணை செயலாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன், கூடலூர் ராமமூர்த்தி, சக்தி பாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.
19-ந் தேதி வால்பாறை தொகுதியில் நடக்கும் கூட்டத்தில் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, தென்றல் விஜய் ஆகியோரும், 21-ந் தேதி சூலூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், வி.பி. கந்தசாமி எம்.எல்.ஏ., சந்திரகாசன், நாகராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.