கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பில் நிர்வாகியாக உள்ள பார்த்திபன் என்ற நபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்றும் அரசியல் செல்வாக்கு இருப்பதன் காரணமாக காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கோவை: திருவாரூர் மாவட்டத்தில் சேர்ந்த தீபா மற்றும் நாமக்கல் பகுதியை சேர்ந்த உமா என்ற இரு பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி - நிர்மலா தம்பதியரின் மகனான பார்த்திபன், தான் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பில் நிர்வாகியாக பணியாற்றி வருவதாகவும் கூறி பல இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மேலும், சிறுமிகளை கூட ஏமாற்றி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு 17 வயதே நிரம்பிய தன்னை பொள்ளாச்சியில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர்காணல் செய்ததாகவும், அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன் தனக்கு மயக்கம் தெளிந்ததும் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் வரை கோவைபுதூர் பகுதியில் அவருடன் தனிக்குடித்தனம் செய்து வருவதாக, தீபா என்ற பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
திடீரென சில நாட்கள் ஊருக்கு செல்வதாக கூறி சென்ற பார்த்திபன், வீடு திரும்பாததால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் அழைப்பை எடுத்து தான் பார்த்திபனின் மனைவி என்று கூறியதுடன், தன்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரித்தபோது, பார்த்திபன் ஏற்கனவே பல பெண்களை இதேபோன்று அவர் ஏமாற்றியது தெரியவந்ததாகவும் பார்த்திபனின் மோசடிக்கு அவரது தாய் மற்றும் தந்தை உடந்தையாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதான் என் மருமகள் என ஆசை வார்த்தையால் பேசியதாகவும் குறிப்பிட்டார்.
இதேபோல், நாமக்கல்லை சேர்ந்த உமா என்ற பெண்ணை கடந்த 2020"ம் ஆண்டு தன்னை திருமணம் செய்ததாகவும் திருமணம் செய்த சில மாதங்களில் அவரை விட்டு சென்றதாக புகாரில் கூறியுள்ளார்.
கோவை வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியில் தன்னுடன் வசித்து வந்த பார்த்திபன் அவ்வப்போது வீட்டிற்கு வருவதும் பின்னர் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக கூறி செல்வதும் வழக்கமாக வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த ஓராண்டாக எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் தான் அவரை பற்றி விசாரித்தபோது அவரது லேப் டாப் மற்றும் சமூக வலைதள பக்கம் ஆகிவற்றில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததாகவும், கூறினார்.
மேலும், காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பார்த்திபனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதன் காரணமாகவே தங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை, என்று குற்றம் சாட்டினார்.