அடைமழையால் மீண்டும் சின்ன வெங்காய விளைச்சல் பாதிப்பு - கவலையில் கோவை விவசாயிகள்

கடந்த பருவத்தில் சின்ன வெங்காயம் அதிக விளைச்சல் காரணமாக குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்தாண்டு குறைந்த அளவு பயிரிடப்படட்டாலும், மழை குறுக்கிட்டு விளைச்சலை பாதித்துள்ளதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் நஷ்டஈடாக வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: தொண்டாமுத்தூரில் சமீபத்தில் பெய்த கனமழையால், சின்ன வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், ஏக்கருக்கு ஒரு லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோவை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே சின்ன வெங்காய சாகுபடிக்கு பெயர் போன இடங்களில் ஒன்று தொண்டாமுத்தூர். இதமான காற்று, தப்பாத பருவ மழை, பயிரிடலுக்கு ஏற்ற பதமான மண் வளம் உள்ளிட்டவற்றின் காரணமாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகப்படியாக பயிரிட்டு வருகின்றனர்.

தட்ப வெட்ப நிலைக்கு தகுந்தவாறு தொண்டாமுத்தூர் பகுதிகளில் வருடந்தோரும் தோராயமாக 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகின்றன.

தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்ற விவசாயிகளை காட்டிலும் சின்ன வெங்காயத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள், தங்களின் விளைநிலங்களில் வருடத்தில் ஒரு பருவத்திலாவது சின்ன வெங்காயத்தினை பயிரிட்டு விடுவதாக கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு, தொண்டாமுத்தூர் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே சின்ன வெங்காய சாகுபடியில் தொண்டாமுத்தூர் கொடி கட்டி பறக்கிறது.

18,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காய சாகுபடி

வழக்கமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த பருவத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகமாகி கடும் விலை சரிவை சந்தித்தன. இதனால், பெரும் நஷ்டமடைந்த விவசாயிகள், இந்த வருடம் சின்ன வெங்காய சாகுபடி பரப்பளவை குறைத்துள்ளனர்.

இதன் காரணமாக வழக்கத்தை விட குறைவாக 70 சதவிகிதமே சின்ன வெங்காய பயிர் நடவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு பருவத்தில் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சின்ன வெங்காய பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வந்தன.

அறுவடை சமயத்தில் ஆட்டிப் படைத்த பூஞ்சை



18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அறுவடை செய்ய மூன்று வாரமே இருக்கும் தருவாயில், பூஞ்சை, தண்டு அழுகல், வேர் அழுகல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இது குறித்து தோட்டக்கலை துறை வேளாண் அதிகாரிகள் கள ஆய்விலும் ஈடுபட்டிருந்தனர். பருவமழை மாற்றத்தால் இந்த பாதிப்பு நடந்ததாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விவசாயிகள் பயிருக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து, உரமிட்டு பயிரை மீட்டுள்ளனர்.

சின்ன வெங்காயத்தை சின்னா பின்னமாக்கிய அடைமழை

பூஞ்சை பாதிப்பிலிருந்து மீண்ட சின்ன வெங்காயம் பயிர்களுக்கு மீண்டும் ஒரு தடையாய் அமைந்தது பருவமழை.

அறுவடையின் முதல் படி என்பது சின்ன வெங்காயத்தை மண்ணிலிருந்து வெளியே எடுத்து நிலத்தின் பாத்தி மீது வைக்கப்படும். அவற்றின் தண்டுகள் உலர்ந்தவுடன் சின்ன வெங்காயத்தை தண்டிலிருந்து நீக்கி பட்டறையில் தேக்கி வைக்கப்படும். பின்னர், சின்ன வெங்காயம் நுகர்வோருக்கு விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படும்.



இந்த நிலையில் அறுவடையின் முதல் நிலையான நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட சின்ன வெங்காயம் பாத்தி மீது உலர வைக்கப்பட்ட நிலையில் மழை பதம் பார்த்தது. இடைவிடாத அடைமழையால் சின்ன வெங்காயம் பாத்தியிலேயே அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன.

களிமண், மலை பகுதியில் 50% அவுட்



தொண்டாமுத்தூரில் பரவலாக மழை பொழிந்து சின்ன வெங்காய பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அதிகம் மழை பொழியும் மழையடிவாரப் பகுதிகளில் உள்ள களிமண் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழை நீடித்தால் அடுத்த ஒரு வாரத்துக்குள் சின்ன வெங்காயம் அழுகும் என்றும், முளைப்பு கட்டும் என்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இரண்டு பருவங்களிலும் இன்னல்கள் - நீடிக்கும் சிக்கல்

கடந்த பருவத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகமாகி கடும் விலை சரிவை சந்தித்தன. அப்போது, சின்ன வெங்காயம் கிலோ 5 முதல் 10 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டு கேட்பாரற்று கிடந்தன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தில் இருந்தனர்.

பெரும்பாலான சின்ன வெங்காயம் பட்டறையிலேயே தேக்கி வைக்கப்பட்டு முளைத்தன. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் இந்த பருவத்தில் முந்தைய பருவத்தை விட குறைவாக சின்ன வெங்காயம் பயிரிட்டு சந்தைபடுத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். 



ஆனால் அவர்களின் திட்டத்தில் தீயை வைத்த மழை மீண்டும் அவர்களை நஷ்டத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றது.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர வலியுறுத்தல்



சின்ன வெங்காய சாகுபடிக்கு ஏக்கருக்கு நடவு கூலி, முட்டு கட்டுதல், சின்ன வெங்காய விளைச்சலை அதிகரிக்க இடும் உரம் என ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து வருகின்றனர். 

அறுவடை நேரத்தில் அடை மழையால் சின்ன வெங்காயம் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால், முந்தைய பருவத்தில் விளைச்சல் அதிகமாகி நஷ்டமடைந்திருந்த விவசாயிகள் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாகவும், அடுத்த பருவத்தில் மீண்டும் பயிரிடும் விதமாகவும், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு தரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் சின்ன வெங்காய சாகுபடி.



விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சியால் விவசாயிகளை ஒருபுறம் நஷ்டப்படுத்தும் சின்ன வெங்காயம், மறுபுறம் இடைவிடாத அடை மழை பொழிவினால் வரத்து குறைந்து விலை விண்ணையும் தொட்டு நுகர்வொரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

சமயலறையில் தவிர்க்க முடியாத உணவு பொருளான சின்ன வெங்காயம், ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு வகையில் பேசு பொருளாகவே மாறியிருக்கின்றன. உரித்தால் மட்டுமே கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் இன்று நினைத்தாலே கண்ணீரை வரவழைக்கின்றது என்றால் அது மிகையல்ல...! 

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...