திமுகவுக்கு சோதனை வந்த நேரத்தில் கோவை மாவட்டத்தில் கட்சியை கம்பீரமாக நிலை நிறுத்திய பெருமை பொங்கலூர் பழனிச்சாமிக்கு உண்டு - கோவையில் முதல்வர் புகழாரம்

கோவையில் நடைபெற்ற திமுக மூத்த நிர்வாகி பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தி திருமண நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் உள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும், என கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும், திமுக மாநில இளைஞரணி இணைச் செயலாளருமான பைந்தமிழ்பாரி - கீதா தம்பதியின் மகளான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மதியழகன் - விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திமுகவின் தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் பொங்கலூர் பழனிச்சாமி திருமணம், அவரது மகனின் திருமணம் ஆகியவற்றை தலைமையேற்று நடத்தி வைத்தார். அவர் இருந்திருந்தால், இந்த திருமணத்தையும் தலைமையேற்று நடத்தி இருப்பார், இன்று அவரது இடத்தில் நான் இருந்து, திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

பொங்கலூர் பழனிச்சாமியின் திருமணத்தின் போது, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். திமுகவுக்கு சோதனை வந்த நேரத்தில் கோவை மாவட்டத்தில் கட்சியை கம்பீரமாக நிலை நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. மதியழகன் நல்ல உழைப்பாளி, அவரது வரவு கழகத்திற்கு வலு சேர்க்கும் என கழக நிர்வாகிகள் கூறியது பொய்யாகவில்லை.

இந்த திருமணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சீர் திருத்த திருமணமாகவும், சுய மரியாதை திருமணமாகவும் நடைபெற்றுள்ளது. தமிழ் திருமணமாக கலைஞர் தமிழுக்கு செம்மொழி என பெயர் பெற்று தந்த தமிழ் மொழியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுபோன்ற சீர் திருத்த திருமணங்கள் 1967க்கு முன் நடைபெறும் என சொன்னால் அதை சட்டபடி அங்கீகாரம் பெற்றதாக அறிவிக்கும் அறிவிப்பை நாம் பெற்றிருக்கவில்லை. 1967ல் திமுக வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சியில் இருந்த போது இதனை தீர்மானமாக நிறைவேற்றினார்.

இன்றைக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி 6வது முறையாக பொறுப்பேற்று சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 70% நிறைவேறி உள்ளது. மீதமுள்ள 30% விரைவில் நிறைவேற்றுவோம் என்பது மக்களுக்கு தெரியும்.

நான் கடந்த முறை கோவை வரும் போது மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். அப்போது, மக்கள் சில மனுக்களை அளித்தனர். பொதுவாக, கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஏக்கத்தோடு அளிப்பதை நான் பார்த்துள்ளேன். ஆனால், என்னிடம் மனு அளிக்கும் போது மகிழ்ச்சியுடன், பூரிப்புடன் நம்பிக்கையுடன் அளித்தார்கள். மனு அளிக்கும் போது நன்றி என்ற வார்த்தையை குறிப்பிட்டு அளித்துள்ளனர். எனவே, இந்த மனுவை அளிக்கும் போதே அது நிறைவேற்றப்படும் என நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது, இது தான் திராவிட மாடல் ஆட்சி.



சட்டமன்ற தேர்தலுக்கு முன், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்களில் 70% மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கென தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களிடத்திலும் நான் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவேன். 

அப்போது, ஒரு தோழர் என்னிடம் 10 ஆண்டுகளாக அலைந்தும் அவரது பிரச்சனை நிறைவேற்றபடாமல் இறந்தபொழுது இந்த ஆட்சியில் 10 நாட்களில் அதற்கு தீர்வு கிடைத்ததாக கூறினார். மேலும், அவர் என்னிடம் நாம் இருவரும் பிரசிடென்சி கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்று கூறினார், அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. 

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது பிரச்சனைகளை முதல்வர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என உறுதிமொழி அளித்துள்ளதாகவும் அதை எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும், இதுதான் திமுக இதுதான் திராவிட மாடல் ஆட்சி. 

ஜெயலலிதாவின் மறைவு மர்மமாக உள்ளது என அவர்கள் கட்சிக்குள்ளேயே கூறினர். ஓபிஎஸ்-க்கு கட்சிக்குள் இருந்த பிரச்சனையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்தார், தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓ.பி.எஸ் கூறிய நிலையில், ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்திருந்தார். 

ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமியின் தலைமையில் அந்த கமிஷன் ஒரு ஒப்புக்காக செயல்பட்டு வந்தது. அப்போது, எதிர்கட்சியாக இருந்த நாம், ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம் என்று கூறி இருந்தோம். தற்போது, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை எங்களிடத்தில் கொடுத்துள்ளார். 

அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் உள்ளது அதனை தற்போது நான் கூறவில்லை சட்டமன்றத்திற்கு அது வரும். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். 



மேலும், தூத்துக்குடி சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது. அன்றைய முதல்வர் அதனை தொலைக்காட்சியில் பார்த்தது தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம். 

இன்றைக்கு, ஈபிஎஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி வருகிறார். ஆனால், அதனை நிறைவேற்றி வருவதற்கான எடுத்துக்காட்டுகளாக தான் நான் இதனை கூறியுள்ளேன். 

பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், பால் விலை, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு ஆகியவற்றை செய்துள்ளோம். 5ம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஸ்மார்ட் கிளாஸ் யை துவக்கி வைக்க தமிழகம் வருகிறார். அன்றைய தினமே அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரியில் சேர்கின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்க உள்ளோம். 

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டமும் கூடிய விரைவில் வரும். நிதியை சரி செய்து கொண்டிருக்கிறோம், அதன் பின்பு நிச்சயமாக அதனையும் நிறைவேற்றுவோம். அதில் சந்தேகம் வேண்டாம் நான் கலைஞரின் மகன் என்றும் கூறினார். 

இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள் கோவை மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...