விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படவுள்ள நிலையில் விழா அமைதியாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி பத்ரி வேண்டுகோள்.
கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், எஸ்.பி பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்:
கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 67.5 லட்சம் மதிப்பிலான 451 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 107 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் கோவை மாவட்டத்தில் வைக்கப்பட உள்ளது.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபட உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா மிக அமைதியாக நடக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
கோவை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்ட மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறத. இதன் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி, பள்ளிக்கு அருகில் கஞ்சா, போதை பொருட்களை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.