கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளராக பணியாற்றி வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான சம்பவம் குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்டபட்ட கே வி ஆர் நகர் 2வது வீதி கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஸ் (35). திருமணமானவர் இவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளராக பணியாற்றி வந்த இவர், இன்று மாலை திருப்பூர் தாராபுரம் ரோடு, பி.கே.ஆர் காலனி அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி மின் கம்பத்திலேயே பரிதாபமாக துடி துடித்து பலியானார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தீர விசாரித்து வருகின்றனர்.
மின் ஊழியர் ஒருவர் பழுது நீக்கும் போது, மின்சாரம்.பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.