கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு. புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறையை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவை பந்தயச்சாலை பகுதியில் நீதித்துறை பயிற்சி மையக்கட்டிடத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குழந்தைகளின் நலனுக்காக போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஆகியவற்றை காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
யுனிசெப் உடன் இணைந்து குழந்தைகள் நலக் கொள்கை என்ற கருத்தியல் திட்டத்தை இந்தியாவில் தமிழகம் தான் முதன்முதலில் கொண்டு வந்தது. 8 மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் முதல்வர் இத்திட்டத்தை வெளியிடுவார்.
இதுபோன்று அரசு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல துறையில் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளுக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு பிடித்த மாதிரி வழங்கப்படுகிறது. குறிப்பாக வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குழந்தைகள் இசைக்கருவி பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்வதோடு, மற்றவர்களுக்கு பயிற்சியளித்தும் வருகின்றனர்.
ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட வசதிகளை செய்து தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதோடு இல்லத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் வராத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எதுவும் தனக்கு கிடைக்கவில்லை, யாரும் தன்னை கவனிக்கவில்லை என நினைத்தாலே அவர்கள் எளிதாக சமூகத்தில் வித்தியாசமானவனாக மாற்றப்படுகிறான். சமூக விரோதிகளிடம் சிக்கி குற்றவாளியாகவும் மாறிவிடுகிறான்.
சமீப காலமாக சட்டத்துக்கு முரணான செயல்களை செய்வதில் குழந்தைகளை ஈடுபடுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தவறுதலாக யாரேனும் புகார் தெரிவித்தாலும் அவர்களால் உயர் கல்வி படிக்க முடியவில்லை, எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஒன்றும் செய்யாமல் தான் மாட்டிக் கொள்வதாக நினைக்கும் சிலர் புரியாத பருவத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் சிறுவர்கள் கடையும் வைக்க முடியாது, வேலைக்கும் செல்ல முடியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் செய்த தவறுகளாக அவர்களை எண்ணி குழந்தை நேயத்தோடு அணுகி அவர்களை நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டும்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், நீதித்துறை மற்றும் காவல்துறை இணைந்து காவல் தாழ்த்தாமல் விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாளும் போது நேய எண்ணத்தோடு அவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் அணுகும்போது, அந்த குழந்தைகளை நல்ல குடிமகனாக மாற்றிவிட முடியும்.
கொரோனாவில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாத நிதியுதவியும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வழக்கு, நிதி, பலன் ஆகியவற்றை செய்யும் போது அவர்களின் மனது பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் விரைந்து செய்ய வேண்டும்.
கடந்த 2012-லிருந்து எட்டு ஆண்டுகளாக பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிதியான 9 கோடியே 24லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இந்த அரசு பொறுப்பேற்ற பின் வழங்கப்பட்டு உள்ளது.
27 கோடி செலவில் யுனிசெப்-உடன் இணைந்து பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டு உள்ளது. ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் வெளியே செல்லாமல் தங்களது உயர்கல்வியை இல்லத்திலிருந்தே தொடரலாம் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அவர்களின் விருப்பப்படி வெளியே செல்பவர்களுக்கு தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கபட்டு வருவதாகவும் ராணிப்பேட்டையிலிருந்து 13 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கபட்டதன் மூலம் தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இது சமூக நலத்துறையில் முதல் அத்தியாயம் என்பதோடு இது தொடரும் எனவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.