வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஊர்வலம், சிலை அமைப்பது ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் நடைபெற வேண்டும் என்று ஆட்சியரிடம், திராவிட விடுதலை கழகத்தினர் மனு அளித்தனர்.
கோவை: நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மற்றும் விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வரும் 31ம்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், சிலை வைப்பது ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் நேரு தாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்ததாவது: "இந்து அமைப்புகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக வெவ்வேறு அமைப்புகளின் பெயரால், வெவ்வேறு நாட்களில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி பெறுவதால், மக்கள் பெரும்.இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலருக்கும் விநாயகர் சதுர்த்தி நடக்கும் இரண்டு வார காலம் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டி உள்ளது.
மேலும், ஊர்வலத்தின் பொழுது சரக்கு வாகனங்களில் ஏராளமானவர்கள் ஏறிக்கொண்டு, கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் செல்வதால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே,உயர்நீதிமன்ற மற்றும உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலம் நடைபெற வேண்டும். ஊர்வலத்தின் போது, பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும், விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பதை உறுதி செய்ய,திராவிடர் விடுதலை கழகத்தினர் அந்த ஊர்வலத்தை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் ரசாயனங்களால் தயார் செய்யப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்", என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.