சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தேசிய கொடியும் ஏற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் மற்றும் தேசியக் கொடியை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக எம்.எஸ்.நகர் பகுதியில் திரண்ட பாஜகவினர், மற்ற கட்சியினரின் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரி பிச்சையாவை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.