கோவையில் 200 கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு தொகுதியில் தான் ரூ.9 கோடிக்கு வடிகால் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகளுக்கு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அதற்கும் நிதி ஒதுக்க முதலமைச்சர் தயராக இருக்கிறார்.
கோவை: கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளம் வடிகால் வசதியினை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர், வெற்றி செல்வன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தற்போது உள்ள குறுகலான இரண்டு குழாய்கள் மூலம் வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டால், குளத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்படும் என கடந்தாண்டு ஆய்வு செய்த போது தெரியவந்தது.
இது குறித்து பெறப்பட்ட ஆலோசனை மற்றும் உத்தரவுகளின்படி, ரூபாய். 9 கோடி செலவில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர் சந்திப்பின் போது உறுதி செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு:
கோவை - திருச்சி சாலை, சுங்கம் அருகே உள்ள வாலாங்குளம் பகுதியில் மழைநீர் வடிகாலுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிகக் குறுகலாக இரண்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இந்த குழாய்கள் வழியாக செல்லும் நீரின் அளவு அதிகமானால் குழாயில் மிகப்பெரிய உடைப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வடிகால் குழாய்களின் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக, புதிய திட்டமிடலுடன் சுங்கம் சந்திப்பிலிருந்து சங்கனூர் பள்ளம் வரை 2.1 கிலோ மீட்டருக்கு 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்பட உள்ளது.
இந்த வடிகால் கட்டுவதற்கான திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் முடிக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தொடர், விபத்து நடைபெறும் சுங்கம் திருச்சி மேம்பாலம் குறித்து ஐ.ஐ.டி குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தவுடன் பணிகள் தொடங்கும்.
கோவையின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் என்னென்ன குறைகள் உள்ளதோ அதை சரி செய்து அதற்கான நிதிகளை பெற்று முழுவதுமாக மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அளவிற்கு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அனைத்து அரசு பணிகளும் நடைபெற்று வருகிறது. பிற மாவட்டங்கள் போன்றே, கோவைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் 200 கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு தொகுதியில் தான் ரூபாய். 9 கோடிக்கு வடிகால் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகளுக்கு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கும் நிதி ஒதுக்க முதலமைச்சர் தயராக இருக்கிறார்.
விமான விரிவாக்கத்திற்கு, ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் ரூபாய். 1132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24 ம் தேதி, கிணத்துக்கடவில் 82 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். "குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் கதறல்" என செய்தி போடுகிறார்கள்.
இடையர்பாளையம், வடவள்ளி, மருதமலை போன்ற பகுதிகளில் மின் அளவீடு கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் சரியான முறையில் கணக்கெடுக்க வருவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு நாட்களுக்குள் கமிட்டி அமைத்து மின் ஊழியர்கள் கணக்கெடுக்க வராத இடங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கையிருப்பில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மின்கம்பங்கள் உள்ளது. அதேபோல பழுதடைந்த 35 ஆயிரம் மின் கம்பங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது. 10ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு மின் கம்பிகள் கையிருப்பில் உள்ளது. அதேபோல, 10 லட்சத்து 77 ஆயிரம் மின் கம்ப பணிகள் சரி செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
வால்பாறை பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததால் பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மழை காரணமாக, மின் விநியோகத்திலும் பாதிப்புகள் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களிடமும் தொலைபேசி வாயிலாக பிரச்சனைகள் குறித்து பேசி தேவைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவினர் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள் (அட்டுக்கல் பிரச்சினைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம்) குறித்து பேசி போராட்டம் நடத்தட்டும்.
தைரியமும், திறமையும், இருந்தால் 410 ரூபாய் சிலிண்டர் 1120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 54 ரூபாய்க்கு விற்ற டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதற்குப் போராட்டம் நடத்தட்டும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.