கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் மகன் மீது தவறுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மகன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை: கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் மகன் மீது தவறுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் மாநகர காவல்ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கனூர் சாலை,கண்ணப்ப நகர்பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவருடன் ஆங்காங்கே கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு சென்றதாக மேலும் 15-பேர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ரத்தினபுரி கனேஷ் நகர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்ற இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:- தனது பெயர் செந்தில்குமார் என்றும், பெயிண்டிங் வேலை பார்த்து வருவதாகவும்,தனது மகன் மோசஸும் பெயிண்டிங் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 29 ஆம் தேதி தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்குச் சென்றதாகவும், மீண்டும் கடந்த 31 ஆம் தேதி கோவை வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 1 ஆம் தேதி மோசஸ் பாலாஜி என்பவருடன் சேர்ந்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம், செல்போன் அழைப்பு மூலமும் தகவல் வந்தது.
ஆனால் தனது மகன் மோசஸ் கஞ்சா போன்ற விற்பனைகளில் ஈடுபடவில்லை என்றும் பாலாஜி என்பருக்கும் தனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஆனால் தவறுதலாக தனது மகன் மீது வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மோசஸ் தலைமறைவாக இல்லை எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மகன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.