நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவது மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பம்ப் உற்பத்தி தொழில் மிகச் சிறந்த வளர்ச்சியை பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என 'சீமா' தலைவர், கே.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை: தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA) 69-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 'சீமா' வளாகத்தில் நடந்தது.
இதுகுறித்து 'சீமா' தலைவர், கே.வி.கார்த்திக் பேசியதாவது:-
உற்பத்தி பிரிவை சேர்ந்த அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இரும்பு தாது மற்றும் ஸ்டீல் முக்கிய மூலப் பொருட்களாகும். இவ்விரு மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த காரணத்தால், தொழில் துறையினர் மிகவும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.
தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று பிரதம நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் இரும்பு தாது மற்றும் ஸ்டீல் ஏற்றுமதிக்கு வரி விதித்தனர். இதன் காரணமாக இவ்விரு மூலப் பொருட்களின் விலை குறைந்தது. நியாயமான விலையில் மூலப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும் வரை எதிர்வரும் நாட்களிலும் இதே வரி விதிப்பு தொடர வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டிருக்கும் நன்றியை தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவர்கள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோவை பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தக்க வைத்துள்ளன.
கடந்த காலங்களில் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பம்ப் உற்பத்தி செய்வதற்கான செலவு 45-சதவீதம் அதிகரித்தது. ஆனால் அதன் விலையை. 25-சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. இதனால் உற்பத்தி தொழில் தொடங்கினர் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டனர். பல்வேறு முன்னணி பம்ப் நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை உயர்த்திய காரணத்தால் அவர்களது நிலையை மார்க்கெட்டில் தக்க வைத்து கொண்டனர்.
பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் பம்ப் உற்பத்தி துறை 20 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவது மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பம்ப் உற்பத்தி தொழில் மிகச் சிறந்த வளர்ச்சியை பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் பம்ப்செட் பெரும்பாலும் இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் போதும் தொழில் துறையில் பல்வேறு பயன்பாட்டுக்கு தேவைப்படும் வகையில் அதிக மதிப்பு கொண்ட பம்ப் செட் உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் முன் வர வேண்டும்.
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சீமா சங்கம் சார்பில், ஆவாரம்பாளையம் கோ இந்தியா வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையம் 'சிட்டார்க்' வளாகத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் 80 சதவீத நிதியுதவி அரசு வழங்கும். இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சீமா சங்கம் சார்பில் 2027 ஆண்டுக்குள் உலக பம்ப் மார்க்கெட்டில் நான்கு சதவீதம் அடைவது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த நோக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்து உள்ள காரணத்தால் எதிர்வரும் நாட்களில் பம்ப்செட் தொழில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அச்சம் தொழில்துறையின் மத்தியில் உள்ளது. இருப்பினும் விவசாய பம்ப்செட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி திரும்பப் பெறும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சீமா' முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார் தொழில்நுட்ப கமிட்டி தலைவர் முருகேசன் உட்பட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாக கமிட்டி மற்றும் தொழில்நுட்ப கமிட்டி உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
'சீமா' சங்கத்தின் புதிய தலைவராக எலன் பம்ப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகேந்திரா பம்ப்ஸ் உரிமையாளர் மிதுன் ராமதாஸ், சூப்பர் டெக் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் குமார் மற்றும் அருண் ரங்கநாதன் உள்ளிட்டோர் 'சீமா' சங்கத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.