வர்த்தகர்களின் பேராசையால் இந்திய ஜவுளி தொழில் தள்ளாட்டம்: நூல், பஞ்சு விலை குறைந்தும் பயனில்லை..! - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்

வர்த்தகர்கள் விலை ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க, மத்திய அரசு சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் இந்திய ஜவுளி தொழில் மீள முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும் - ராஜா எம் சண்முகம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.



திருப்பூர்: வர்த்தகர்களின் பேராசையால், நூல் விலை கிலோவுக்கு ரூ. 40 மற்றும் பஞ்சு விலை ஒரு கேண்டி 30 ஆயிரம் ரூபாய் குறைந்தும் பயனில்லை, என ஜவுளி தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது, பருத்தி சீசன் இல்லாத போதும், விவசாயிகளிடம் பருத்தி கையிருப்பு இல்லாத சூழ்நிலையிலும், பஞ்சு மற்றும் நூல் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அதற்கு காரணம், "பேராசை பெரும் நஷ்டம்" என்ற பழமொழிக்கு ஏற்ப வர்த்தகர்கள் செய்த காரியம் தான், என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்(TEA) தலைவர், ராஜா எம் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து பேசிய அவர்: பஞ்சு மற்றும் நூல் ஆகிய இரண்டு பொருட்களின் விலை ஏற்கனவே வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்த காரணத்தால், தற்போது விலை குறைந்து வரும் நிலையிலும் மார்க்கெட் அதற்கேற்ப சூடு பிடிக்கவில்லை. இதன் காரணமாக, ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருவதாக, ஜவுளி தொழில் துறையினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளி தொழில் விளங்கி வருகிறது. இதன் காரணமாகவே, மத்திய, மாநில அரசுகள் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பஞ்சு, நூல் விலை குறைந்தும் பயனில்லை

இருப்பினும், வர்த்தகர்களின் பேராசை காரணமாக பஞ்சு விலை உயர்த்தப்பட்ட காரணத்தால், தற்போது பஞ்சு மற்றும் நூல் விலை இரண்டும் குறைந்து வரும் நிலையிலும், ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு அவை உதவவில்லை. 40's கவுன்ட் நூலின் விலை ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளில் வர்த்தகர்களின் நடவடிக்கையால் ஒரு கிலோ 500 ரூபாய், என அதிகரித்தது.

அதேபோல, 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்தது. இந்த விலை ஏற்றம் காரணமாக, ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

தொழில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக, பஞ்சு விலை ஒரு கேண்டி இன்றைய சூழ்நிலையில் 95 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 40 40's கவுண்ட் நூல் ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை குறைந்து 440 மற்றும் 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை குறைப்பு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த போதும், ஏற்கனவே வரலாறு காணாத அளவில் அதிகரித்த விலை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தொழில் நிறுவனங்கள் உடனடியாக மீள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. விலை படிப்படியாக குறைந்து வரும் போதும், தற்போது உள்ள சூழல் மாறுவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் தேவைப்படும்.

வர்த்தகர்களின் பேராசையால் வந்த வினை

இன்று காணப்படும் அவல நிலை அனைத்துக்கும் வர்த்தகர்கள் தான் முக்கிய காரணம். பேராசை கொண்டு பஞ்சு விலையை தாறுமாறாக அவர்கள் உயர்த்திய காரணத்தால் இன்று அதனுடைய தாக்கத்தை அவர்களும் அனுபவிக்கின்றனர். அதேபோல், இந்தியாவில் மிக முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளி தொழில் சார்ந்த அனைத்து தொழில்துறையினரும் கடும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய சூழலில், பருத்தி சீசனும் இல்லை, விவசாயிகளிடமும் பருத்தி கையிருப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இருப்பினும், மார்க்கெட்டில் பஞ்சு விலை தொடர்ந்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இது அனைத்து தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகர்கள் செய்த தவறான செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனவே, எதிர்வரும் ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில், விலை ஏற்ற நடவடிக்கையில், வர்த்தகர்கள் ஈடுபடுவதை தடுக்க, மத்திய அரசு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில், இது போன்ற நிலை தொடர்ந்தால் இந்திய ஜவுளி தொழில் மிகப் பெரிய மீள முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும். அதனுடைய தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் கடுமையாக எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...