மருத்துவமனைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்தி மருத்துவமனையை அபகரித்த வழக்கில் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர் தொடர்பான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை எல்லன் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக, தலைமறைவான வழக்கறிஞருக்கு தொடர்பான இடங்களில் சிபிசிஐடி போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரத்தில் செயல்பட்ட எல்லன் மருத்துவமனையை அதன் உரிமையாளர் ராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டு இருந்தார்.
டாக்டர் உமா சங்கர் அந்த மருத்துவமனையை சென்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார். இந்நிலையில் இருவரிடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் டாக்டர் ராமசந்திரன் அடியாட்களுடன் வந்து மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர்கள் நோயாளிகளை விரட்டி விட்டு மருத்துவமனையை கைப்பற்றினார்.
மேலும், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி டாக்டர் உமா சங்கர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் உமா சங்கர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் மோதி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு பொழுது டாக்டர்.உமாசங்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் காவல்துறையினர் சிலரும் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ் மற்றும் கூலிப்படையினர் என 13 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்த பொழுது, டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜேந்திரனை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும், வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கறிஞர் ராஜேந்திரனின் சாய்பாபா காலனியில் உள்ள வீடு, அவருக்கு சொந்தமான லாட்ஜ் மற்றும் அலுவலகம், காந்திபுரத்தில் உள்ள அவரது மற்றொரு வீடு ஆகிய 3 இடங்களில் இன்று 11.30 மணி முதல் சிபிசிஐடி டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்தி மருத்துவமனையை அபகரித்த வழக்கில் வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர் தொடர்பான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.