கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் வேண்டுவோர் www.artandCulture.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கோவை:இசைக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவைமாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இசைப் பயிற்சி படிப்பிற்கு அரிய வாய்ப்பாக கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துறைகளில் இளங்கலை இசைப் பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் 17 வயதிலிருந்து 22 வயது வரையிலும், பட்டயப் படிப்பு பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய துறைகளில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 16 வயதிலிருந்து 21 வயது வரை இருக்க வேண்டும்.
ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு பி.ஏ. இசை அல்லது இசைக்கலை மணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மாலை நேர இசைக்கல்லூரியில் குரலிசை வீணை வயலின் போன்ற பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 16 வயதிற்கு மேல் வயது வரம்பு இல்லை.
மேற்கண்ட இசை படிப்புகளுக்கான கல்விக் கட்டண விவரம் பி.ஏ.இசை வருடத்திற்கு ரூபாய் 1480 பட்டயம் டிப்ளமோ மற்றும் இசையாசிரியர் பயிற்சி வருடத்திற்கு ரூ. 750 மாலை நேர இசைக்கல்லூரி வருடத்திற்கு ரூ 500 ஆகும். மேலும் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ 500 வழங்கப்படும்.
இலவச பயண பேருந்து அட்டை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் வேண்டுவோர் www.artandCulture.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.