குழந்தை மாயமானதாக கிடைத்த புகார் அடிப்படையில், முதல் கட்டமாக குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் நோக்கில் தனிப்படை போலீசார், மருத்துவமனை நிர்வாகம், ரயில்வே போலீசார் உதவியுடன் 24 நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளோம் என மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 24-மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் யுனிஸ், திவ்யபாரதி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவ பிரிவில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பிரசவ வார்டுக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கி சென்றுள்ளனர். தூக்கத்தில் இருந்த விழித்த திவ்யபாரதி அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தை காணவில்லை என கூச்சலிட்டார்.
திவ்யபாரதியின் சத்தத்தை கேட்ட உறவினர்கள் குழந்தையை தேடினர். இதையடுத்து, குழந்தை காணவில்லை என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று யுனிஸ், திவ்யபாரதியிடம் விசாரணை மேற்கொண்டு கண்டிப்பாக குழந்தையை மீட்டு தருவோம் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கோவை, உக்கடம், பொள்ளாச்சி, நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பெண்கள் குழந்தையை கட்டை பையில் வைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், செல்போன் டவர் சிக்னலை தொடர ஆரம்பித்தனர்.
இதையடுத்து, குழந்தையை கடத்திய நபர் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேரளா விரைந்த தனிப்படை போலீசார் அங்கு குழந்தையுடன் இருந்த ஜமினா (34) என்ற பெண்ணை பிடித்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், குழந்தையை பொள்ளாச்சி மருத்துவமனையில் இருந்து கடத்தி, கட்டை பையில் வைத்து, கோவைக்கு கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து கோவையில் இருந்து பாலக்காடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் தனது கணவரிடம் தனக்கு பிறந்த குழந்தை என கூற குழந்தையை கடத்தி சென்றதாக அப்பெண் கூறியுள்ளார். இருப்பினும் கடத்தலில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் கூறும் போது:-
குழந்தை மாயமானதாக கிடைத்த புகார் அடிப்படையில், முதல் கட்டமாக குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் நோக்கில் தனிப்படை போலீசார், மருத்துவமனை நிர்வாகம், ரயில்வே போலீசார் உதவியுடன் 24 நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளோம்.
மேலும், இந்த வழக்கில் குழந்தையை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது சிசிடிவி காட்சிகள் தான், பொது இடங்களில் குடியிருப்பு பகுதியில்கட்டாயமாக சிசிடிவி பொருத்துவது பயனுள்ளதாக இருக்கும், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு பெண்ணை தேடி வருகிறோம், மேலும் குழந்தை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார்.