ஏற்கனவே, நெருக்கடி காரணமாக குறுந்தொழில் துறையினர் பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். ஊழியர்கள் பலர் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு என்பது, கோவை மாவட்ட பம்ப்செட் தொழில் வளர்ச்சியில் மிக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் - தொழில்துறையினர்.
கோவை: மோட்டார் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா பெரும் தொற்று, மூலப் பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு சவால்களை சந்தித்து வரும் தொழில்துறையினர், தற்போது ஜிஎஸ்டி வரி உயர்வால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உலக அளவில் புகழ்பெற்ற கோவை மோட்டார் பம்ப்செட்.
தொழில் நகரான கோவை மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
12% டூ 18% வரி உயர்வு
தற்போது, பம்ப்செட் பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, குஜராத் மாநிலத்தில் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் கோவை போன்ற தொழில் நகரத்திற்கு குஜராத் பம்ப்செட்கள் கடும் தொழில் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA) தலைவர், கார்த்திக் கூறியதாவது:
பக்கவிளைவுகள்: பம்ப்செட் விலை 7,000 ரூபாய் அதிகரிக்கும்!
"பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் பி.ஐ.எஸ்., என்பது உள்ளிட்ட பல்வேறு தரச்சான்று கொண்ட பம்ப்செட் தயாரிப்பது குறித்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், திடீரென பம்ப்செட் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 லிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதனால் ஏற்படும் விலை உயர்வு விவசாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வால், ரூபாய்.7 ஆயிரம் முதல் அதற்கும் மேல், பம்ப்செட் ரகங்களுக்கு ஏற்ப விலை உயரும். ஏற்கனவே, விவசாயம் நலிவடைந்து வரும் நிலையில் பம்ப்செட் விலை உயர்வு வேளாண் துறையில் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே, ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", இவ்வாறு அவர் கூறினார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (KOPMA) தலைவர், மணிராஜ் கூறியதாவது:
கோவை மாவட்ட எம்பி.,க்கள் தொழில்துறையினருக்கு உதவ வேண்டும்..!
பம்ப்செட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது, மார்க்கெட் மிகவும் மந்தமாக உள்ளது. இது தவிர, குஜராத் பம்ப்செட் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், தொழிலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, நெருக்கடி காரணமாக குறுந்தொழில் துறையினர் பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். ஊழியர்கள் பலர் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு என்பது, கோவை மாவட்ட பம்ப்செட் தொழில் வளர்ச்சியில் மிக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பம்ப்செட் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மற்றும் தொழில் துறையினரை கடுமையாக பாதிக்கும். வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கோவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்", இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சார்பற்றது), மாநில பொதுச் செயலாளர், கந்தசாமி கூறியதாவது:
விவசாய பம்ப்செட்களுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்க வேண்டும்..!

தமிழ்நாட்டில் விவசாயம் நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை போர்வெல் பம்ப்செட் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். இத்தகைய சூழ்நிலையில், பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும்.
ஏற்கனவே, பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மோட்டார் பம்ப்செட் விலை உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும்", இவ்வாறு அவர் கூறினார்.