'எனக்குப் பிடித்த கதை' அல்லது 'மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்' அல்லது 'என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை' ஆகிய 3-தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில், 3-முதல் 6-பக்கங்கள் வரையிலான கட்டுரையை எழுதி அனுப்பவேண்டும்.
கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) நடத்தும் புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் 8-முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'கொடிசியா' புத்தகத் திருவிழா தலைவர் விஜய்ஆனந்த், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில்துறையின் வளர்ச்சிக்காக பாடுபடும் கொடிசியா அமைப்பு, பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல் 'கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா'வை நடத்தி வருகிறது.
கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக, புத்தக வாசிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் புத்தகத் திருவிழாவை முன்னெடுக்கிறோம்.
கடந்த 6-ஆண்டுகளாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள், வாசகர்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கிய உலகின் பிரபலங்கள், எழுத்தாளர்கள், பல்வேறு துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வரும் ஜூலை 22 முதல் 31-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நடைபெற உள்ளது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, எண்ணற்ற தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், புத்தகத் திருவிழா நடைபெறும் 10-நாட்களிலும் தினமும் மாலையில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புத்தகத் திருவிழாவை மாணவ, மாணவிகளிடையே அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், கோயம்புத்தூரில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை 3-வது ஆண்டாக நடத்த உள்ளோம்.
அதன்படி, 8-முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 'எனக்குப் பிடித்த கதை' அல்லது 'மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்' அல்லது 'என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை' ஆகிய 3-தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில், 3-முதல் 6-பக்கங்கள் வரையிலான கட்டுரையை எழுதி அனுப்பவேண்டும்.
இதில், தேர்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி கொடிசியா அரங்கில் நடைபெறும் விழாவில், பிரபல ஆளுமைகளால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மொத்தம் ரூ.3-லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டியில், 8-முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம். ஏ-4 அளவு வெள்ளைத்தாளில், 3- 6 பக்கங்களுக்கு மிகாமல், சொந்தக் கையெழுத்தில் தமிழில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.
இந்தக் கட்டுரை சொந்த சிந்தனையில், சுய உழைப்பில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். கட்டுரைக்காக பயன்படுத்தப்பட்ட நூல்களின் பட்டியலை கட்டுரையுடன் இணைக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலும், இதற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும் பூர்த்தி செய்து, இணைக்க வேண்டும். இந்தப் படிவத்தை www.cbf.codissia.com என்ற இணைய முகவரியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இணைப்பு படிவம் பூர்த்தி செய்யப்படாத கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. கட்டுரையுடன் மாணவரின் பெயர், வகுப்பு, வீட்டு முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள், தலைமை ஆசிரியரின் தொடர்பு எண்களைக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குரிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். பரிசளிப்பு விழாவுக்கு வரும் மாணவர்கள், தங்களது பள்ளி அடையாள அட்டையை அவசியம் எடுத்து வர வேண்டும்.
போட்டிக்கான கட்டுரைகளை 'கொடிசியா அலுவலகம், ஜி.டி.நாயுடு டவர்ஸ், ஹூசூர் சாலை , கோயம்புத்தூர் - 641018' எனும் முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவே சமர்ப்பிக்கலாம். வரும் ஜூலை 11-ம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
பரிசுக்குரிய கட்டுரை தேர்வில், நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 88705-06333, 75027-22000 ஆகிய செல்போன் எண்கள் அல்லது www.cbf.codissia.com என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.