கோவையில் குட்கா விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் - காவல் ஆணையர்.
கோவை: கோவையில் குட்கா விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பள்ளிகள் அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 23 பேர் கைது செய்யப்பட்டு 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் குட்கா பொருட்களை தடை செய்வதற்காக நேற்று 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளிகள் அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்துள்ளனர் என்றும் 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இது போன்று விற்பனை எங்காவது நடைபெற்றால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும்படி, ஆணையர் கேட்டுகொண்டார்.
மேலும், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் மாணவர்களை கண்காணிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், போக்சோ தடுப்பு சட்டம் குறித்தும் அவர்களுக்கு கூறியதாக தெரிவித்தார்.
குட்கா விற்பனையில் காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆணையர், கடந்த ஒரு வார காலத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கி, தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் அதிகரித்து வரும் வாகன திருட்டுகளை குறித்து பேசிய ஆணையாளர், இரு சக்கர வாகன திருட்டு குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநர்கள் கணக்கெடுப்பு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் ஆங்காங்கே குறிப்பாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் ரகளையில் ஈடுபடுவதாக வரும் வீடியோ காட்சிகள் மற்றும் செய்திகள் குறித்து பேசிய மாநகர ஆணையர், இரவு நேரத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும், நேற்று காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தனியார் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஊழியர்கள் இருப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த காவல்துறை தரப்பில் இருந்து போதிய உதவிகள் செய்வதாகவும், அப்படியிருக்க சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டால் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தெரிவித்தார்.