அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 22 வயதுடைய இளைஞர்கள் மத்திய ராணுவத்தில் இணையலாம் எனவும், நான்கு ஆண்டுகால பயிற்சிக்குப் பிறகு 25 சதவீதம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து குமரன் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.