கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சில நிமிடங்கள் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை: சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எல்.முருகனிடம் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான நுழைவு சீட்டை கேட்டு தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, விமான நிலையத்திற்கு உள்ளேஇருந்த நுழைவு சீட்டை வைத்திருந்தவர்கள் ஓடிவந்து நுழைவு சீட்டை காண்பித்தனர். அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோபத்துடன் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.