நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு, வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
கோவை: கோவை பேரூர் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதோடு, வீட்டின் சுவர்களை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பேரூர் அடுத்த தி.தி பாளையம் கிராமத்தில் உள்ள குட்டை தோட்டம் அருகே தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்குள் நேற்று இரவு புகுந்த 4-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை சேதம் செய்தது.
இதையடுத்து, தாமோதரன் தங்கியிருந்த வீட்டின், சுவர் மற்றும்கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பாத்திரங்களையும் சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து அச்சத்தில் இருந்தனர்.
காட்டு யானைகள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் தாமதமாக வந்ததால் ஊழியர்கள் வருவதற்கு முன்பாக யானைகள் அங்கிருந்து சென்று விட்டது.
நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது, இந்த சம்பவம்அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.