தனது அலுவலகத்தை ஆளும் கட்சியை சேர்ந்த நபர்கள் காலி செய்யுமாறு நிர்பந்திப்பதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி நபரால்பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது சாதிக் பாஷா (34). இவர் கோத்தகிரி சாலையில் அலுவலகம் அமைத்து வீட்டு மனைகளை விற்று வருகிறார்.
இந்த நிலையில், இவரது அலுவலகத்தை சில அரசியல் பின்புலம் உள்ள நபர்கள்காலி செய்யக்கோரி நிர்ப்பந்தித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இவர் சற்று கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இவரது அலுவலகத்தில் புகுந்து, மர்ம நபர்கள் இவரது அலுவலகத்தை அடித்து உடைத்து அதிலிருந்த பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும், எடுக்காததால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முகமது சாதிக் பாஷா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.