கோவையைச் சேர்ந்த வேளாண் பட்டதாரியான ஸ்வாதி யூபிஎஸ்சி தேர்வில், தேசிய அளவில் 42 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோவை: கோவை தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வாதி (25). இன்று யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேசிய அளவில் 42 வது இடம் பிடித்து கோவையை சேர்ந்த வேளாண் பட்டதாரியான ஸ்வாதி பெருமை சேர்த்துள்ளார்.
இளங்கலை வேளாண் பட்டதாரியான, ஸ்வாதி தன் இளம் வயதில் இருந்தே அவர் பாட்டி, தாத்தா விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததால், ஸ்வாதிக்கு வேளாண்துறை சார்ந்த பட்டபடிப்பு படிக்க நாட்டம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூரில் இளங்கலை வேளாண் படித்து வந்தபோது, விவசாயிகள் சந்தித்து வரும் சாவல்கள் குறித்து கள ஆய்வின் மூலம் விரிவாக அறிந்திருக்கிறார். வேளாண் துறையில் பட்டம் பெற்ற பின்னர், வேளாண் குடிகளின் சவால்களை தீர்க்க இந்திய ஆட்சி பணியில் சேர்ந்து சேவை செய்ய முடிவெடுத்துள்ளார்.
அயராது படித்து, தனியார் கோச்சிங் நிலையத்தில் பயிற்சி பெற்று, முதல் முறை தேர்வு எழுதிய நிலையில், எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர் பெறவில்லை. இதையடுத்து, இரண்டாவது முயற்சியில் ஐ ஆர் எஸ் பணிக்கு செல்லும் அளவுக்கு 126 ரேங்கில் ஸ்வாதி தேர்வானார். இருப்பினும், ஐ.ஏ.எஸ் ஒன்றை மட்டும் இலக்காக வைத்திருந்த ஸ்வாதி, மூன்றாவது முயற்சியில் தற்போது தேசிய அளவில் 42 ஆம் ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
ஐ ஆர் எஸ் பணிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தும், ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்கிற இலக்கில் படித்து தேர்வாகி சாதித்த ஸ்வாதி வேளாண் குடிகளின் சவால்களை கஷ்டங்களை தீர்க்கும் விதமாக கொள்கை ரீதியான முடிவெடுப்பேன் என்றும், விவசாயிகள் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை கொடுப்பேன் என்றுதெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயம், நவீனம் என்று இந்த உலகம் சென்றாலும், விவசாயம் முக்கியம், என்று தெரிவித்தார் ஸ்வாதி.
மகளின் வெற்றியை நினைத்து பெருமைப்படும் அவரது பெற்றோர், இதைவிட சந்தோசமானது வேறு எதுவும் இல்லை என்று உணர்ச்சி பொங்க தன் வாழ்த்தையும், பாராட்டையும் மகளுக்கு தெரிவித்துள்ளார். ஸ்வாதியின், இளம் சகோதரியும் வேளாண் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.