கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து 10.09.2017 (நாளை) முதல் 08.01.2018 முடிய 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க. அடிக்கு மிகாமல் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
மேலும், நஞ்சை பாசனத்திற்கு ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால், 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.