இன்று தேசிய விளையாட்டு தினம்: எந்த ஒரு அடிப்படை வசதி மற்றும் பராமரிப்பு இல்லாத கோவை நேரு ஸ்டேடியம்!

கோவை: நேரு ஸ்டேடியத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சுகாதார கழிப்பறை வசதிகள் இல்லை என்றும் தடகள வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கோவை: நேரு ஸ்டேடியத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சுகாதார கழிப்பறை வசதிகள் இல்லை என்றும் தடகள வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேரு உள் விளையாட்டு அரங்கம் கடந்த 1971-ம் ஆண்டு கட்டப்பட்டது. 30,000 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். தினமும் பல்வேறு போட்டிகளும் இங்கு நடப்பது வழக்கம்.



கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் ஒரே மைதானமாக இருக்கும் இங்கு சுகாதாரமான கழிவறை வசதிகளும், போதிய குடிநீர் வசதிகளும் இல்லை.

கவலை

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வீரர்கள் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், நேரு ஸ்டேடியத்தின் நிலை அவர்களை கவலை கொள்ளச் செய்கிறது. ஸ்டேடியம் மோசமான பராமரிக்கப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர். இதனால், நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வரும் தடகள வீரருடன் பேசுகையில், "மோசமான மற்றும் பொறுப்பற்ற பராமரிப்பு காரணமாக கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாக இருக்கின்றன. பல விளையாட்டு வீரர்கள் அசுத்தமான கழிப்பறைகளால் சிறுநீர் தொற்றுநோயை எதிர்கொள்கின்றனர்." என்றார்.



காயமடையும் வீரர்கள்

தடகளப் போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக இங்கு சின்தடிக் தளம் கடந்த 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது அந்த தளம் சேதமடைந்து வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுகிறது.



விளையாட்டு வீரர்களுக்கான அறை என்பது இங்கு மற்றொரு பிரச்சனையாக உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடை மாற்றுவதற்குத் தேவையான முறையான அறை இங்கு இல்லை. இது குறித்து தடகள வீராங்கனை ஒருவர் கூறுகையில், "இங்கு சரியான அறைகள் இல்லாத காரணத்தால் கழிவறையில் தான் உடை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. அங்கும் சரியான கதவுகள் இல்லாத காரணத்தால் மிகவும் சிரமப்படுகிறோம்." என்றார். 



இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ஜெயசந்திரன் கூறுகையில், "சின்தடிக் தளம் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். தளத்தை சரி செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தளத்தை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் அதற்கான முறையான காலணிகள் அணிந்து பயன்படுத்த வேண்டும். ஆனால், இங்கு அந்த தளத்தை தினமும் பயன்படுத்துகின்றனர். இருந்த போதும் ஆண்டுக்கு ஒருமுறை தளம் சீரமைக்கப்படுகிறது.



கழிவறையைச் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆண்டு முழுவதும் இங்கு போட்டிகள் நடைபெறுவதால் அதனை முறையாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விளையாட்டை ஒருங்கிணைப்பவர்களிடம் கழிவறையை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறோம். 

இந்த அரங்கத்தில் நான்கு ஃப்ளட்லைட் லைட்கள் (floodlights) உள்ளன, அவை ஸ்டேடியம் நிர்வாகிகளால் பயன்படுத்தப்படவில்லை. நாங்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறோம். ஒரு மாதத்திற்கு நாங்கள் அதைப் பயன்படுத்தினோம், அதற்காக ரூ.1 லட்சம் மின்சார கட்டணமாக நாங்கள் செலுத்தினோம். நிகழ்வு அமைப்பாளர்கள் விளக்குகள் தேவைப்படும் போது டீசல் பயன்படுத்தி அதனை பயன்படுத்தலாம்." என்றார்.

தனியாரிடம் சென்று பயிற்சி பெற முடித்த பல ஏழை மாணவர்களும், இளைஞர்களும் இந்த மைதானத்தை உபயோகப்படுத்துகின்றனர். அவர்கள் விளையாட்டுத் திறனை போற்ற வேண்டிய வகையில் மைதானத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter