டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மதுரை

டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் அருண்கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் அருண்கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

3-வது டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ஜெகதீசன் 42 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அபிஷேக் தன்வர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். .

இதைத்தொடர்ந்து, 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சியகரமானதாக இருந்தது. தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் கேப்டன் ரோகித் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியளித்தனர். இதனால், முதல் ஓவரின் முடிவில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து மதுரை அணி பரிதவித்து கொண்டிருந்தது. 

இருப்பினும், 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் ஷிஜித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் வீரர்கள் வென்ற விருதுகளின் விவரம்: 

ஆட்ட நாயகன் மற்றும் தொடரில் அதிக ரன்கள் (472) எடுத்து தொடர் நாயகன் விருது ஆகியவற்றுடன் அதிக சிக்சர்கள் (23) அடித்த வீரர் விருது அருண் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. தொடரில் அதிக விக்கெட் (15) வீழ்த்திய வீரர் அபிஷேக் தன்வருக்கு அளிக்கப்பட்டது. சிறந்த கேட்ச் பிடித்த வீரராக ஷாருக்கானும், அதிக பவுண்டரிகள் (45) அடித்த வீரராக ஜெகதீசனும் தேர்வு செய்யப்பட்டனர். 

Newsletter