கோடிப் கால்பந்து போட்டி: அர்ஜெண்டினாவை தோற்கடித்து இந்திய அணி வரலாற்று சாதனை

20 வயதுக்குட்பட்டோருக்கான கோடிப் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை இந்திய அணி தோற்கடித்தது.

20 வயதுக்குட்பட்டோருக்கான கோடிப் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை இந்திய அணி தோற்கடித்தது. 

20 வயதுக்குட்பட்டோருக்கான `ஃபிபா' உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2019-ம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்கத் தயாராகும் வகையில், இந்திய அணி ஸ்பெயினில் நடந்து வரும் கோடிப் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. மர்சியா (0-2), மர்டானியா (0-3) அணிகளுக்கு எதிராகத் தோற்ற இந்திய அணி, தனது 3-வது போட்டியில் வெனிசுலாவிற்கு எதிரான ஆட்டத்தில் சமன் செய்தது. 

இந்த நிலையில், பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை இன்று இந்திய அணி எதிர் கொண்டது. போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய அணியின் தீபக் தங்கிரி தலையால் முட்டி முதல் கோலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்க அர்ஜெண்டினா அணி போராடியது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இந்திய வீரர் அனிகெட் சிவப்பு அட்டை காட்டி, நடுவரால் வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இருப்பினும், இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 68-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரி கிக்கை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அன்வர் அலி கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. 

பின்னர், போட்டியின் 72-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி ஆறுதல் கோல் அடித்தது. இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, தெற்கு அமெரிக்கா நாட்டு அணிக்கு எதிராக வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

Newsletter