பர்மிங்காம் டெஸ்ட் போட்டி : 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரு அணிகளுககு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும், பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற அனைவரும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பொறுப்பாக ஆடிய கோலி இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்ததுடன், (149 ரன்கள்) இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இறுதியில், இந்திய அணி 274 ரன்களுக்கு எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு, விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. வழக்கம் போல கேப்டன் கோலி மட்டும் தாக்குப்பிடித்து ஆடினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே தினேஷ் கார்த்திக் 20 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த கோலி - ஹர்திக் பாண்டியா இணை, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய கேப்டன் விராட் கோலி, 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் கை ஓங்கியது. இறுதியில் இந்திய அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் 2 விக்கெட்டுகள் மற்றும் சாம் குரான், ரஷித் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter