கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்: ஈரப்பதத்தை பொருட்படுத்தாமல் சீறிப்பாய்ந்த கார்கள்

கோவை: செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது.



கோவை: செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போட்டிகளில், சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எல்.ஜி.பி பார்மூலா 4, யூரோ ஜே.கே-18 ஆகிய கார் பந்தயங்களும், சுசுகி ஜிக்சர் கப் (Gixxer cup) இரு சக்கர வாகன பந்தயங்களும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

தொழில்நுட்ப காரணமாக நேற்று முன்தினம் நடைபெறாத யூரோ ஜே.கே-18 நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா-4 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் டார்க் டான் ரேசிங் அணியை சேர்ந்த டெல்லி வீரர் ரோகித் கண்னா முதலிடத்தையும், அவிலான்ச்சி ரேசிங் அணியை சேர்ந்த சித்தேஷ் மண்டோடி இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.



இரண்டாவது போட்டியில் எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடத்தையும், அவிலான்ச்சி ரேசிங் அணியை சேர்ந்த சித்தேஷ் மண்டோடி இரண்டாம் இடத்தையும் எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

யூரோ ஜே.கே.-18 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் இலங்கை வீரர் பிரையன் பெரேரா முதல் இடத்தையும், மும்பை வீரர் நயன் சாட்டர்ஜி இரண்டாம் இடத்தையும், சென்னை வீரர் அச்வின் தத்தா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இரண்டாவது போட்டியிலும் இவர்களே முன்னிலை வகித்தனர்.

மூன்றாவது போட்டியில் சென்னை வீரர் கார்த்திக் தரணி முதலிடமும், மற்றொரு சென்னை வீரர் அஸ்வின் தத்தா இரண்டாம் இடமும், நயன் சாட்டர்ஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். யூரோ ஜே.கே-18 மூன்றாவது பந்தயம் தொடங்கும் முன்பு மழை பெய்த காரணத்தால் ஓடுதளத்தில் ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால், போட்டி தொடங்க தாமதமாகியது.

இதனைத் தொடர்ந்து, வெட் ரேஸ் போட்டிகளில் ஈரப்பதத்தையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் சீறிப் பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை ஹவுரா அணி வீராங்கனை மேகா முதல் முறையாக பங்கேற்று நேற்று முன்தினம் நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா-4 கார் பந்தயத்தில் 17-வது இடத்தை பிடித்திருந்தார்.



இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் 15-வது இடத்தையும், மற்றொரு கோவை வீராங்கனை லீ தரண் 18-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter