கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்: முதல் போட்டியில் 17-வது இடத்தை பிடித்த கோவை வீராங்கனை

கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் நேற்று தொடங்கியது.


கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் நேற்று தொடங்கியது.

இந்த போட்டிகளில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எல்.ஜி.பி பார்மூலா-4, யூரோ ஜே.கே-18 ஆகிய கார் பந்தயங்களும் சுசுகி ஜிக்சர் கப் (Gixxer cup) இரு சக்கர வாகன பந்தயங்களும் நேற்று தொடங்கியது.

எல்.ஜி.பி பார்மூலா-4 போட்டியின் முதலாவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் சென்னை வீர்ர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பெற்றார். இன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.

பார்மூலா-4 பந்தயங்களில் பெண்கள் அதிகம் கலந்து கொள்ளாத நிலையில் நேற்று நடைபெற்ற பார்மூலா-4 கார் பந்தயத்தில் முன்னாள் தேசிய வீரர் சொராஸ் ஹட்டாரியாவின் கோவை அஹூரா ரேசிங் அணியில் இருந்து 6 பெண்கள் கலந்து கொண்டனர்.



கடந்த 26, 27, 28 ஆகிய தேதிகளில் அஹூரா ரேசிங் சார்பில் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். அதில் 12 பெண்கள் பந்தயத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

கோவையில் இருந்து மேகா என்ற கல்லூரி மாணவியும், ஷியாதரன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவர் செல்வராஜ், பவானி கங்கா தம்பதியினரின் மகளான மேகா (21) குமரகுரு கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர்  சயின்ஸ் பயின்று வருகிறார். 24 பேர் பங்கேற்ற போட்டியில் 17-வது இடத்தை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இவர்.



இது குறித்து மேகா கூறுகையில், "தேசிய அளவிலான கார் பந்தயத்தில் ஓட்டுவது இதுவே முதல் முறை. இரண்டு வார கால பயிற்சிக்குப் பின்னர் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன். முதல் முறையாக இந்த பார்மூலா-4 போட்டியில் ஆண்களுடன் கலந்து கொண்டது பயமாக இருந்தது. ஆனால் நிலைமையை சமாளிக்க முடிந்தது. 



இந்த போட்டி 'திரில்லிங்' அனுபவமாக இருந்தது. தடைகள் என நினைக்காமல் இது போன்ற போட்டிகளில் பெண்கள் தைரியமாக கலந்து கொள்ள வேண்டும்." என்றார்.

இந்த பந்தயத்தின் முதல் சுற்றில் முதலிடம் பெற்ற சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் கூறுகையில், "பார்மூலா கார் பந்தயங்கள்  ஆண்களுக்கான போட்டி என பொதுவாக  நினைக்கின்றனர். இன்று நடைபெற்ற போட்டியில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாளை நடைபெறும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்." என்றார். 

இன்று எல்.ஜி.பி பார்மூலா-4 கார் பந்தயத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதே போல் யூரோ ஜே.கே-18 பிரிவில் மூன்று சுற்று போட்டிகளும், சுசுகி ஜிக்சர் கப் இருசக்கர வாகன போட்டிகளும் நடைபெறுகின்றன.

Newsletter