ஆப்கன் டெஸ்ட் : இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்கள் தவான், முரளி விஜயின் சதத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்கில் 474 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்கள் தவான், முரளி விஜயின் சதத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்கில் 474 ரன்கள் குவித்தது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். தொடக்கம் முதலே தவான் அதிரடியாக விளையாடினார். முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக ஆடிய தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன்பே 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு தவான் - முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. 2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் சதத்தை நெருங்கிய போது, ஆட்டம் மழையால் தடைப்பட்டது. இதனால், இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர், மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் அவர் 143 பந்தில் சதம் அடித்தார். 

தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் 105 ரன் எடுத்திருக்கும் இருக்கும்போது ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, ராகுல் (54), புஜாரா (35), ரகானே (10) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. 

இதைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். பாண்டியா ஒருபுறம் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தாலும், விக்கெட்டுக்கள் மறுமுனையில் சரிந்து கொண்டே வந்தது. அரைசதம் விளாசிய பாண்டியா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டும், நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Newsletter