7 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடிய சென்னை: நடப்பு தொடரில் விருதுகள் பெற்ற வீரர்களின் விவரம்

ஐ.பி.எல்., 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.


ஐ.பி.எல்., 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

11-வது சீசன் ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடி சதத்தால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.

இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் கைப்பற்றினார். மேலும், 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த தொடரில் வீரர்கள் பெற்ற விருதுகளின் விவரம் வருமாறு:

எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.

மொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.

இதேபோல், 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.

சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.

இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு வழங்கப்பட்டது.

மேலும், இந்த தொடரின் ஃபேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

வயதைவிட உடற்தகுதியே முக்கியம்:

2 ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

கேப்டன் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வாட்சன் (36), பிராவோ (34), டுபெலிசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். இதனால். ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்சை “அன்கிள்ஸ் அணி” என்று விமர்சனம் செய்தனர். இதற்கு அவர்கள் கோப்பையை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தனர்.



ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றபோது டோனி இது தொடர்பாக கூறியதாவது:- எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால், வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை சொல்லலாம். 32 வயதான அவர், நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே, வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம்.

இறுதிப்போட்டிக்கு நுழைந்த பிறகு அனைத்து வீரர்களுக்கும் அவர்களது பங்களிப்பு என்ன என்பது தெரியும். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். டுபெலிசிசை முதலிலும், அம்பதி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை.

இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவது கடினம். புள்ளி விவரங்களை பற்றி பலர் பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27 (நேற்று) எனது ஜெர்சி எண் 7, எங்களுக்கு 7-வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. ஆனாலும், இதெல்லாம் காரணமில்லை. கடைசியில் நாங்கள் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றுள்ளோம்.இவ்வாறு கூறினார்.

Newsletter