விஜய் சங்கருக்குப் பிறகு களமிறங்கியதால் வருத்தப்பட்டாரா தினேஷ் கார்த்திக்

நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிபோட்டியில் ஆல்ரவுண்டர் விஜய்சங்கருக்கு பிறகு களமிறங்குமாறு கூறியதால், தினேஷ் கார்த்திக் வருத்தப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிபோட்டியில் ஆல்ரவுண்டர் விஜய்சங்கருக்கு பிறகு களமிறங்குமாறு கூறியதால், தினேஷ் கார்த்திக் வருத்தப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பந்தை விரட்டினார். கடைசியாக ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த இறுதிப் போட்டியில் அவர் சாதித்திருப்பது அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். அவர் தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எவ்விதமான சூழலாக இருந்தாலும் அவர் தயாராக இருப்பார். முன்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, பின்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, அவர் அணிக்கு உதவத் தயாராக இருப்பார். இதுபோன்ற வீரர்கள்தான் அணிக்குத் தேவை.

நான் அவுட் ஆகி ஓய்வறைக்குச் சென்றபோது தினேஷ் கார்த்திக் வருத்தத்தில் இருந்தார். அவரை 6-ம் நிலையில் களமிறக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார். (அதற்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார்) நான் அவரிடம் சொன்னேன் - நீங்கள் கடைசியில் களமிறங்கி, ஆட்டத்தை முடித்துத் தரவேண்டும் என விரும்புகிறேன். உங்களிடமுள்ள திறமைகள் கடைசி மூன்று, நான்கு ஓவர்களில் தேவைப்படும் என்றேன். அதனால்தான் நான் 13-வது ஓவரில் அவுட் ஆகும்போது அவர் 6-வது வீரராகக் களமிறங்கவில்லை. அதில், அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஆட்டத்தை முடித்த விதத்தில் அவர் திருப்தியடைவார் என நினைக்கிறேன். 

அவரிடமுள்ள ஷாட்களால் அவரால் ஆட்டத்தை நன்கு முடிக்க முடியும் என்று நம்பினேன். ருபல் ஹுசைன் பந்தில் அடித்த ரேம்ப் ஷாட் போல அவரால் அதை எப்போதும் அடிக்கமுடியும். 18 அல்லது 20-வது ஓவரை முஸ்தாஃபிசர் வீசுவார், அவரை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என எண்ணினேன். அவருடைய ஆஃப் கட்டர்களை தினேஷ் கார்த்திக்கால் நன்கு எதிர்கொள்ளமுடியும். ஏற்கெனவே தமிழ்நாட்டு அணிக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதுபோன்ற ஆட்டங்களை அவர் ஆடியுள்ளார். இவ்வாறு பாராட்டினார். 

Newsletter