இலங்கை முத்தரப்பு தொடரில் கோலி, தோனிக்கு ஓய்வா..?

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறுகிறது. வரும் மார்ச் 6 ஆம் தேதி இந்தப் போட்டிகள் துவங்க உள்ளன. இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் நிதாஹஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.  

மார்ச் 6-ம் தேதி நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 லீக் போட்டியில் மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி மார்ச் 18-ம் தேதி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடக்கிறது.

தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்ததும், இந்திய அணி உடனடியாக இலங்கை செல்கிறது. இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனி உள்ளிட்ட ஐந்து மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. புவனேஷ்குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படலாம் என கூறப்படுகிறது. தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டால் இளம் வீரர் ரிஷப் பாண்ட் வாய்ப்பு பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newsletter