இருநாட்டு ஒருநாள் தொடரில் 500 ரன்கள் கடந்து கோலி உலக சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் தொடரில் விளையாடியது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டுக் கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 எனக் கைப்பற்றியது.

இப்போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி சதம் (129) அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது 35-வது சதமாகும். மேலும், இந்த தொடரில் அவரது மூன்றாவது சதமாகும். நேற்றைய போட்டியில் அவர் 62 ரன்களை கடந்த பொழுது இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக, கடந்த 2013-14ல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித்சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் அடித்த 129 ரன்களின் மூலம் இந்த தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 558 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். 

முன்னதாக, இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது கோலி இரண்டு கேட்ச்கள் பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பிடிக்கும் 100வது கேட்ச் ஆகும். ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30-வது வீரர் கோலி ஆவார். இதன்மூலம், விவியன் ரிச்சர்ட்ஸ், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் மகிலா ஜெயவர்தனே 218 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160 கேட்ச்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156 கேட்ச்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கள் 140 கேட்ச்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

இதேபோல, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில், சர்துல் தாகூர் வேகத்தில் தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் 600-வது கேட்ச் ஆகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். இதில், 600 கேட்ச்களும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும்.

தோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும், 272 ஒருநாள் போட்டிகளில் 296 கேட்ச்களும், 75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்களும் பிடித்துள்ளார். இப்பட்டியலில், தென்ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (952 கேட்ச்கள்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (813 கேட்ச்) முதல் இரண்டு இரண்டங்களில் உள்ளனர்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டோனி இன்னும் 33 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 12-வது வீரராக இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter