டி20 போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் 2-வது முறையாக பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

நியூசிலாந்து அணி 4.4 பந்தில் 50 ரன்னைத் தொட்டது. 9.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. மார்ட்டின் கப்தில் 30 பந்திலும், கொலின் முன்றோ 27 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 56 பந்தில் 100 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி 10.4 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. முன்றோ 33 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கப்திலுடன் செய்ஃபெர்ட் ஜோடி சேர்ந்தார். இவர், 6 பந்தில் 12 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் விளையாடி வந்த கப்தில் 49 பந்தில் (6 பவுண்டரி, 9 சிக்சருடன்) சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது.

பின்னர், 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் வார்னர், டி'ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து சிக்சராகவும், பவுண்டரியாகவும் பறந்தன. இதனால், பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. வார்னர், டி'ஆர்கி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 121 ரன்கள் குவித்தது. வார்னர் 24 பந்தில் (4 பவுண்டரி, 5 சிக்சருடன்) 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிறிஸ் லின் 13 பந்தில் 18 ரன்னும், மேக்ஸ்வெல் 14 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில், சிறப்பாக விளையாடிய டி'ஆர்கி ஷார்ட் 44 பந்தில் (8 பவுண்டரி, 3 சிக்சருடன்) 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டி'ஆர்கி ஷார்ட் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 16.4 ஓவரில் 217 ரன்கள் குவித்திருந்தது. 20 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19-வது ஓவரின் 5-வது பந்தை பிஞ்ச் சிக்சருக்கு தூக்க ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பிஞ்ச் 14 பந்தில் (தலா 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன்) 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

இந்த வெற்றியின் மூலம், டி20 கிரிக்கெட்டில் 243 ரன்கள் என்ற இலக்கை எட்டிய முதல் அணி என்ற வரலாற்று பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 236 ரன்களையும், இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 230 ரன்களையும் சேஸிங் செய்துள்ளது.

Newsletter