ஐ லீக் கால்பந்து போட்டி: சென்னை - மிசோரம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமன்

'ஐ லீக்' கால்பந்து போட்டியில் சென்னை, மிசோரம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

கோவை: 'ஐ லீக்' கால்பந்து போட்டியில் சென்னை, மிசோரம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், தேசிய அளவிலான சிறந்த 10 அணிகள் மோதும் ஐ லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், கொல்கொத்தா ஈஸ்ட்பெங்கால் கிளப், மோகன்பகான், கோவா சர்ச்சில் பிரதர்ஸ், இம்பால் நெரோகா கால்பந்து கிளப், ஐஸ்வால் கால்பந்து கிளப், பஞ்சாப் மினர்வா கிளப், கேரளா கோகுலம் கிளப், இந்தியன் ஏரோஸ், ஷில்லாங் கால்பந்து கிளப், சென்னை சிட்டி கால்பந்து கிளப் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன. 

இந்த நிலையில், கோவை நேரு மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், வெற்றி பெற ஆக வேண்டிய நெருக்கடியில் சென்னை அணி, மிசோரம் அணியை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கிய சென்னை அணி, மிசோரத்தை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் விளையாடியது. ஆனால், முதல் பாதியில் மிசோரம் அணிக்கு யூகோ கோல் அடித்து முன்னிலைப் பெற்று தந்தார். 

பின்னர் இரண்டாவது பாதியில், பதிலடி கொடுக்க சென்னை அணி வீரர்கள் மிகவும் போராடினர். அதன்பலனாக,  சென்னை வீரர் ஆண்டனி  கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனானது. இதைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்காக கடுமையாக போராடினர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால், இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. 

Newsletter