ஜுனியர் உலக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் : 4-வது முறையாக கோப்பையை வென்று சாதனை

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  

மவுன்ட் மாங்கானுவில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக எட்வர்ட்ஸ், பிரையன்ட் களமிறங்கினர். பிரையன்ட் 14 ரன்னிலும், எட்வர்ட்ஸ் 28 ரன்னிலும் போரெல் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து வந்த மெரியோ, உப்பல், மெக்ஸ்வீனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய மெரியோ 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். உப்பல் 38 ரன்னிலும் மெக்ஸ்வீனி 23 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் போரெல், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிவம் மாவி ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல தொடக்க வீரர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. கேப்டன் பிருத்திவி ஷா. மனோஜ் கல்ரா ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டனர். அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருந்த போது, பிருத்திவி ஷா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் தன்பங்கிற்கு 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய மனோஜ் கல்ரா சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அவருடன் ஹர்விக் தேசாய் உறுதுணையாக நின்று ரன்களை குவித்தார். 

இறுதியில், 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜுனியர் உலக் கோப்பையை 4-வது முறையாக இந்தியா கைப்பற்றியது. மனோஜ் கல்ரா 101 ரன்களும், தேசாய் 47 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக சதம் அடித்த மனோஜ் கல்ரா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன், 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன்மூலம் ஜுனியர் உலகக்கோப்பையை அதிக முறை கைப்பற்றிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜுனியர் இந்திய அணியின் பயிற்சியாளராக இந்தியா அணியின் தடுப்புச்சுவர் என அனைவராலும் பாராட்டப்பட்ட ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter