ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் போட்டியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் போட்டியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய துவக்க ஜோடி பிரித்வி ஷா(41), மன்ஜோட் கல்ரா(47) நல்ல துவக்கம் தர அடுத்து களமிறங்கிய ஷூப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு ஹார்விக் தேசாய்(20) அனுகுல் ராய்(33) ஒத்துழைப்பு தந்தனர்.

கடைசி நேரத்தில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மன் கில் சதம் விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. ஷூப்மன் கில் 102 ரன்னுடனும், இஷான் போரல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. துவக்க வீரர்கள் முகமது ஷாயிப் ஆலம் 7 ரன்களும், இம்ரான் ஷா 2 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இவர்களை விரைவில் வெளியேற்றிய இஷான் போரல், அடுத்து வந்த அலி ஷர்யப் ஆசிப் (1), அமாத் ஆலம் (4) ஆகியோரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார். 

28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டர் வீரர்களும் கைகொடுக்கவில்லை. சற்றுநேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோகைல் நசீர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். முகமது தாகா(4), ஹசன் கான் (1), ஷகீன் ஷா அப்ரிடி (0), ஷாத் கான் (15), அர்ஷத் இக்பால் 1)  என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, பாகிஸ்தான் அணி 69 ரன்களில் சுருண்டது. இதனால்  இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் போரல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிவ சிங், பாரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆட்டநாயகனாக கில் தேர்வு செய்யப்பட்டார். 

ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.  இந்தப் போட்டியில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ஷூப்மன் கில்லை, ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ.1.8 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter