ஐ.பி.எல். ஏலம்: கோடிகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட விரிஸ்ட் ஸ்பின்னர்கள்

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில் விரிஸ்ட் ஸ்பின்னர்களான ரஷித்கான், சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் கோடிக் கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 27

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில் விரிஸ்ட் ஸ்பின்னர்களான ரஷித்கான், சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் கோடிக் கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

11-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் பிரிவில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.  விரிஸ்ட் ஸ்பின் என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பந்துவீச்சுசாகும். பொதுவாக சுழல் பந்துவீச்சில், பந்தை ஸ்பின் செய்ய விரல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரிஸ்ட் ஸ்பின் முறையில் மணிக்கட்டு மூலம் பந்து ஸ்பின் செய்யப்படுகிறது. இது பந்து வீச்சின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ​​பந்துக்கு ஒரு எதிர்மறையான சுழற்சி அளிக்கிறது.

சர்வதேச டி-20 பவுலர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷித் கானை 9 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது. இந்திய அணியின் இளம் விரிஸ்ட் ஸ்பின்னரான சஹாலை 6 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணி தக்கவைத்து கொண்டது. இதேபோல மற்றொரு இந்திய விரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5.80 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துக் கொண்டது. இது தவிர சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிரை ரூ. 10 கோடிக்கும், கரன் சர்மாவை ரூ. 5 கோடிக்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது. பியூஸ் சாவ்லாவை ரூ. 4.20 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது. அமித் மிஷ்ராவை டெல்லி அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களான ஆடம் சாம்பா, சாமுவேல் பத்ரி,  இஷ் சோதி ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, விக்கெட் கீப்பர்களை எடுப்பதிலும் ஒவ்வொரு அணியினரும் போட்டிப் போட்டுக் கொண்டனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடந்த முறை குஜாராத் அணிக்காக 2.3 கோடி ரூபாய் ஏலம் போன, அவரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த முறையை விட தினேஷ் கார்த்திக்குக்கு 5.1 கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும்.

ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையான சஞ்சு சாம்சனை 8 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. ராபின் உத்தப்பாவை 6.4 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது. அம்பதி ராயுடுவை 2.2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஜோஸ் பட்லரை 4.4 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டான் டி காக்கை 2.8 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரூ அணி ஏலம் எடுத்தது.  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சகாவை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

Newsletter