ஐ.பி.எல்.லில் அணிகள் மாறிய அஸ்வின், ஹர்பஜன்சிங் டுவிட்டரில் கருத்து

ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் சூதாட்டம் போன்றது என நடப்பாண்டில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கும் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.


ஜனவரி 27

ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து அஸ்வின், ஹர்பஜன்சிங் ஆகியோர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். 

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. 

இந்த நிலையில், சென்னை அணியின் வீரர் அஸ்வின் ஐ.பி.எல். ஏலத்தில் விடப்பட்டார். அஸ்வினை எடுப்பதில் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. 

பஞ்சாப் அணி சார்பில் தான் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:- ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் சூதாட்டம் போன்றது. நான் எனது புதிய வீட்டிற்குச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இனிய நினைவுகளுக்காக நான் சென்னை அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதேபோல, ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது :- வணக்கம் தமிழ்நாடு.. என்னுடைய புது வீட்டில் விளையாடுவது மகிழ்ச்சி. உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண் இனி என்னை சிங்கமுன்னு வைக்கணும். என கூறி உள்ளார்.

Newsletter