பென் ஸ்டோக்ஸை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான்: 10 ஆண்டுகளுக்கு பிறகு அணி மாறினார் ஹர்பஜன்சிங்

ஐபிஎல் 2018-ம் சீசனுக்கான இன்றைய முதல் நாள் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.20 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸை ரூ. 12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஜனவரி 27

ஐபிஎல் 2018-ம் சீசனுக்கான இன்றைய முதல் நாள் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.20 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸை ரூ. 12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

11-வது கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட 578 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இரண்டு வருட தடைக்கு பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டுள்ளன. பெங்களூர் அணி கோலி, ஏபி டிவில்லியர்சையும், சென்னை அணி தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவையும், ஐதராபாத் அணி டேவிட் வார்னர், புவனேஸ்குமாரையும், ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித்தையும், மும்பை அணி ரோகித்சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ராவையும், கொல்கத்தா அணி சுனில் நரேனையும் தக்க வைத்து கொண்டது. 

ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் விடப்பட்டார். அவரை 5.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து ஐதராபாத் அணி தக்க வைத்து கொண்டது. சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை பஞ்சாப் அணி 7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. யுவராஜை ரூ. 2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. 

1.60 கோடி ரூபாய்க்கு டுபிளசியையும், மேற்கு இந்திய அணி வீரர் பிராவோவை சென்னை அணி 6.4 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி தக்க வைத்து கொண்டது. ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. பொல்லார்டை 5.40 கோடி ரூபாய்க்கு மும்பை அணி தக்க வைத்து கொண்டது. டி20 ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் கிறிஸ்கெயில் மற்றும் ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 12.5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. கடந்த முறை 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஹானேவை 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ஏலம் எடுத்தது. வங்கதேச வீரர் ஷாகிப்பை ஐதராபாத் அணி 2 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா 9.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தில்லி அணி, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை 9 கோடி ரூபாய்க்கும், கம்பீரை 2.80 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுலை பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது. 

கடந்த முறை அதிக விலைக்கு போன யுவராஜ்சிங்கை, ஆரம்ப விலைக்கே பஞ்சாப் ஏலத்தில் எடுத்தது. கருண்நாயரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்து கொண்டது. 

Newsletter